24 மணி நேரத்தில் மின் இணைப்பு: அமைச்சர் உறுதி
பொள்ளாச்சி அருகே கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் 212 கிராம மக்கள் பயன் பெறும் வகையில் ரூ 72 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டது. கப்பளாங்கரை ஊராட்சியில் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவுக்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் முன்னிலை வகித்தார்.
தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், ஒன்றிய செயலாளர் செட்டியக்காபாளையம் துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திட்டத்தை தொடங்கி வைத்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது, 212 கிராமங்களைச் சேர்ந்த
3 லட்சத்து 62 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 72 கோடியில் புதிய கூட்டு குடிநீர்த் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சீராக வினியோகிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இலவச மின்சாரம் வேண்டி பதிவு செய்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போரில் ஒரு லட்சம் பேருக்கு முதலில் இணைப்பு வழங்க முடிவு செய்து தற்போதுவரை 55 ஆயிரம் நபர்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 4
ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெறுவதற்கான அனைத்து பணிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. புதிதாக 8 ஆயிரத்து 905 மின்மாற்றிகள் அமைக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். தற்போது வரை 8 ஆயிரத்து 200 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு விட்டன. இனிவரும் காலங்களில் விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கும் அளவுக்கு மின்வாரியம் தயாராகி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.