5 மாத குழந்தையை கடத்தி விற்றவர் மீது குண்டர் சட்டம்
பொள்ளாச்சி அருகே 5 மாத பெண் குழந்தையை கடத்தி விற்றவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மர்ம நபர்கள் 5 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்றனர். ஆனைமலை போலீசார் 6 தனிப்படை அமைத்து பொள்ளாச்சி மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சேத்துமடை அண்ணாநகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் முருகேசனும், அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த ராமர் என்பவரும் சேர்ந்து, குழந்தையை கடத்தி முத்துப்பாண்டி என்பவருக்கு ரூபாய் 90 ஆயிரத்துக்கு விற்றதும் தெரியவந்தது. ராமர், முருகேசன், முத்துப்பாண்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரையை ஏற்று குழந்தை கடத்தலில் முக்கிய குற்றவாளியான ராமரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.