மின் கம்பி உரசியதால் தீப்பற்றி நாருடன் எரிந்த டெம்போ
பொள்ளாச்சி அருகே தென்னை நார் ஏற்றிவந்த டெம்போ மின் கம்பி உரசியதால் தீப்பிடித்து கருகியது.
பொள்ளாச்சியை அடுத்த கம்பாலப்பட்டியில் இருந்து டெம்போ ஒன்று தென்னை நார் ஏற்றிக்கொண்டு வெள்ளாளபாளையம் நோக்கிச் சென்றது. சிறிது தூரம் சென்றவுடன் மின் கம்பியில் உரசியதால் தீப்பொறி ஏற்பட்டு டெம்போவில் உள்ள தென்னை நார் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் டெம்போவை ஓட்டி வந்த கஞ்சம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வனிடம் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து டிரைவர் மற்றும் கிளீனர் டெம்போவில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினர். தென்னை நார் மற்றும் டெம்போ எரியத் தொடங்கியது. அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர் ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர்.