அ.தி.மு.க. துரோகத்தில் பாடம் கற்றது பா.ம.க.- மாநில பொருளாளர் பேட்டி
அ.தி.மு.க. துரோகம் மூலம் பா.ம.க. பாடம் கற்று உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது என மாநில பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் அவர் மாநகராட்சியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசுகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் பா.ம.க. தனித்து போட்டியிட்டு வெற்றிபெறும்.
முதல் வேட்பாளர் பட்டியலை நாங்கள்தான் வெளியிட்டுள்ளோம். அ.தி.மு.க.., தி.மு.க.வுடன் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிடும் தலைமையின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மற்றவர்கள் எங்கள் மூலம் பயன் அடைந்தார்கள், என்பதுதான் உண்மை. அ.தி.மு.க. வினர் பா.ம.க. வுக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்பது கடந்த தேர்தலிலேயே தெரிந்தது. இதனால் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம். அதனால்தான் நாங்கள் தனித்துப் போட்டியிட்டு எங்களுடைய செல்வாக்கை சோதனை செய்ய உள்ளோம்.
பா.ம.க. எப்போதும் மக்களுக்கு தொண்டு செய்யும் கட்சி. அதே தொண்டு தொடர்வதற்கு திண்டுக்கல் மாநகராட்சியை முதல் மாநகராட்சியாக பா.ம.க. கைப்பற்றும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அவருடன் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பொறுப்பாளர் முருகசாமி, மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி, அமைப்புச் செயலாளர் திருப்பதி உட்பட பலர் இருந்தனர்.
செய்தியாளர் ரியாஸ், திண்டுக்கல்.