மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா
கொடியேற்றத்துடன் துவக்கம்
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடிமரத்துக்கான மூங்கிலை பக்தர்கள் சர்க்கார்பதியை அடுத்த வனப்பகுதியில் இருந்து பிரத்தியோகமாக வெட்டி எடுத்து வந்தனர். 70 அடி நீளமுள்ள இந்த கொடிமரம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இன்று காலை கோவிலுக்கு முன்பாக ஏற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையாளர் கருணாநிதி, எம்.எல்.ஏ. க்கள் வேலுமணி, அமுல் கந்தசாமி, ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரி, தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர். வரதராஜன், ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, ஆனைமலை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சாந்தலிங்க குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வருகிற 14ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் மயான பூஜை நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் 17ம் தேதி காலை 9 மணிக்கு மேல் துவங்குகிறது.