விதையில் குழப்பம் – விளைச்சல்..?
கோவையில் சாதிக்குமா திமுக..?
அ.தி.மு.க.வி.ன் கோட்டை எனப்படும் கோவையில், வேட்பாளர் தேர்வில் நிலவும் குளறுபடிகளால் தி.மு.க. தனது பலத்தை நிரூபிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியையும் கோட்டை விட்டது.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையின் பக்கம் கவனத்தை திருப்பிய தி.மு.க. தலைமை அமைச்சர் செந்தில் பாலாஜியை மாவட்ட பொறுப்பு அமைச்சராக களமிறக்கியது.
அவரும் பம்பரமாய் சுழன்று நிர்வாகிகள் சந்திப்பு, ஆலோசனைக்கூட்டம், பொது நிகழ்ச்சிகள் என தனக்கு கொடுத்த பொறுப்பை கச்சிதமாக செய்து வருகிறார்.
இருந்தபோதிலும் சில நிர்வாகிகளின் செயல்பாட்டால் வேட்பாளர்கள் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலிலும் கோவை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாறும் என்றே பரவலாக பேசப்படுகிறது.
தி.மு.க.வின் தீவிர விசுவாசிகளின் புலம்பல்: ஆட்சி பொறுப்பை ஏற்று திறம்பட செயல் படுவதால் பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.விற்கு வரத் துவங்கினர், வந்து கொண்டும் இருக்கின்றனர்.
கட்சிக்காக பாடுபடுபவர்களுக்கு அதிகபட்சம் உள்ளாட்சி பொறுப்புகளுக்கு வாய்ப்பு கொடுத்தாலே மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும். ஆனால் சில நிர்வாகிகள் தலைமையைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தாங்களாகவே சுயமாக முடிவெடுத்து மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
கோவையைப் பொருத்தவரை கோவை மாநகராடசி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய 3 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளிலும் வேட்பாளர் தேர்வில் பெரும் குளறுபடிகள் உள்ளன.
இதில் உரிய மாற்றங்களைச் செய்யாவிட்டால் அ.தி.மு.க. வினரே மீண்டும் அதிக இடங்களைப் பிடிக்க வாய்ப்புள்ளது. கோவையின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது பண பலத்தால் நம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை விலைக்கு வாங்கிவிட்டாரோ என்ற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது.
இந்நிலைமை நீடித்தால் உள்ளாட்சியிலும் கோவை அ.தி.மு.க. வினரின் கோட்டை என்ற நிலை உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு தெரிவித்தனர்.