சோழிங்கநல்லூரில் தி.மு.க. வட்டச் செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் 188-வது தி.மு.க. வட்ட செயலாளர் 38 வயதான செல்வம். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மாநகராட்சி 188-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் இரவு பேசிக்கொண்டிருந்தார். செல்போன் அழைப்பு வந்ததால் அலுவலகத்தின் அருகே நடந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென வந்த 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் செல்வத்தை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்வத்தை கட்சியினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கூடியதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து,மடிப்பாக்கம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டது. செல்வத்தின் பிரேதம் பரிசோதனைக்காக கொண்டு சென்ற போது, ஆதரவாளர்கள் வழி விடாமல் கோஷமிட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் சீட் கிடைப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமா? அல்லது ரியல் எஸ்டேட் தொழில் முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர். பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரதீப் மற்றும் உதவி ஆய்வாளர் பிராங் டி ரூபன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்தியாளர் ரமேஷ்,
சோழிங்கநல்லூர்.