நுால் விலை மீண்டும் உயர்வு: பின்னலாடை துறையினர் அதிர்ச்சி
நுால் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், மாதந்தோறும் பின்னலாடை உற்பத்திக்கு பயன்படும் ஒசைரி நுால் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதளால் திருப்பூர் பின்னலாடைத்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மாதம்தோறும் 1ம் தேதி நுால் விலை நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம், மத்திய பட்ஜெட் என்பதால் பஞ்சு விலையை கட்டுப்படுத்தும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு இல்லாததால் நேற்று நுால் விலை மீண்டும் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
பின்னலாடை தொழில்துறையினர் கூறுகையில், ஏற்றுமதி வர்த்தகம், ஒப்பந்த அடிப்படையில் நடக்கிறது. ஒப்பந்தம் செய்த பின் தொடர்ந்து நுால் விலை உயர்ந்தால், நிர்ணயித்த விலைக்கு பின்னலாடை தயாரித்து அனுப்புவதில் பெரும் நஷ்டம் ஏற்படும். பஞ்சு மற்றும் நுால் விலையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும் என்றனர்.