கோவையின் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் முழு வெற்றி – அமைச்சர் உறுதி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. முழு வெற்றி பெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரு நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை ஏற்ற மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று வெறும் 8 மாதங்களில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட முதல்வர் திறம்பட செயல்பட்டு வருகிறார்.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவரது செயல்பாடுகளை அனைத்து தரப்பினருமே பாராட்டுகின்றனர்.
ஆகவே தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் தி.மு.க. மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களிப்பார்கள்.
கோவை மாவட்டத்தை பொருத்தவரை 10 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 33 பேர் ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு வெற்றி பெறுவார்கள்.
காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்கள். தமிழகம் முழுவதிலும் 300 இடங்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 3 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் நிச்சயம் பெரிய மாற்றம் ஏற்படும் என்றார்.