திண்டுக்கல் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் 14வது வார்டில் தி.மு.க. சார்பில் சரவணன் போட்டியிடுகிறார். இவர் வாக்கு சேகரிக்கும் போது, கொரோனா நிவாரண தொகையாக ரேஷன் கார்டுக்கு ரூ. 4000 வழங்கியது, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை தள்ளுபடி, அனைத்து மகளிர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் இலவச பயண வசதி, 32 லட்சம் கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூபாய். 1500 ஓய்வு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட திமுக அரசின் சாதனைகளை கூறி பொது மக்களிடையே வாக்குகள் சேகரித்தார். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் 31வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கயல்விழி கண்ணன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வார்டு பகுதியில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க கவுன்சிலர் அலுவலகம் ஏற்படுத்தப்படும், பொது மக்கள் புகார் அனுப்ப வாட்ஸ்அப் நம்பர் அறிவிக்கப்படும், புகார் பெட்டி வைக்கப்படும், வார்டு பகுதியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களின் குறைகளை கேட்க கூட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்களிடையே எடுத்துக்கூறி வாக்குகள் சேகரித்தார். செல்லும் இடங்களிலெல்லாம் பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் திமுக வார்டு செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரியாஸ்,
திண்டுக்கல்.