பொங்கல் தொகுப்பில் தி.மு.க. அரசு ஊழல் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் அ.தி.மு.க. சார்பில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ, எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளிலும் நம் கட்சியினர்தான் மேயராக அமர வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளில் நம் கட்சி வேட்பாளர்களே அதிக அளவில் வெற்றி பெற வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக தி.மு.க.pவுக்கு சரியான பாடத்தை மக்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சி புதிதாக எந்த திட்டத்தையும் மக்களுக்காக கொண்டுவரவில்லை. சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தி.மு.க.வினர் 525 வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் 200-ஐ நிறைவேற்றியதாக சொல்வது பொய். குடும்ப தலைவிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என உறுதி கூறியதிலிருந்து, கல்வி கடன் தள்ளுபடி, முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்குதல் போன்றவற்றை நிறைவேற்றவில்லை.
மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. கொள்ளையடிப்பதற்காகவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆகவே உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
செய்தியாளர் மாரி ராஜா,
தூத்துக்குடி.