கூட்டணி தர்மத்தை மதித்து தி.மு.க. வேட்பாளர் மனு வாபஸ்
பொள்ளாச்சி நகராட்சி 34 வது வார்டு கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் தி.மு.க. வேட்பாளர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி நகராட்சியின் 36 வார்டுகளிலும் தி.மு.க. சார்பில் போட்டியிட பலரும் ஆர்வம் தெரிவித்தனர். வேட்பாளர்கள் தேர்வு, தலைமையிடம் ஒப்புதல் பெறுதல், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை என உள்ளூர் நிர்வாகிகள் பரபரப்பாக இயங்கி வந்தனர்.
இந்த பரபரப்புக்கிடையே எழுந்த பல்வேறு யூகங்களால் தங்களுக்கு சீட் கிடைக்குமா கிடைக்காதா என்று விருப்பம் தெரிவித்த தி.மு.க.வினர் பலரும் குழப்பமடைந்தனர்.
இதற்கிடையே சிலர் சுயேச்சைகள் ஆகவும் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தொடங்கினர்.
இதில் 34 வது வார்டில் போட்டியிட மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சண்முகப்பிரியா சீனிவாசன் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 34 வது வார்டு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சண்முகப்பிரியா சீனிவாசன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், தி.மு.க. வுக்காக உண்மையாகவும் விசுவாசமாகவும் பல ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். அதனை அடிப்படையாக வைத்து 34வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தேன்.
உள்ளூர் நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 34வது வார்டை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்குவது என முடிவானது.
ஆகவே கூட்டணி தர்மத்தை மதித்து எனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டேன். அதேபோல் 34வது வார்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் வெற்றி பெற முழுமையாக தேர்தல் பணியாற்றுவேன் என்றார்.