ஈரோட்டில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்த டிஐஜி.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல், வேட்புமனு பரிசீலனை ஆகிய பணிகள் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது. தொடர்ந்து வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. பாதுகாப்பு தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில், வளையகார வீதி, திருநகர் காலனி, காவேரி ரோடு, காமராஜர் நகர்,
ராஜாஜிபுரம், கருங்கல்பாளையம், பெரிய மாரியம்மன் கோவில் வீதி, இந்திராபுரம்,
ஆர்.என் புதூர், ஜவுளி நகர் மற்றும் ராயபாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 13 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோவை சரக டி.ஐ.ஜி. முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி.சசிமோகனுடன் இணைந்து மேற்படி வாக்குச்சாவடிகளை நேரடியாக ஆய்வு செய்தார். தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கு நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில், எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல், தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க உரிய அறிவுரைகள் வழங்கினார்.