அள்ளி வாரிய தி.மு.க. அதிர்ச்சியில் வாடிய அ.தி.மு.க.
வாக்குப் பதிவுக்கு முன்பே பெரிய நெகமம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது அ.தி.மு.க. வினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அதிக இடங்களை கைப்பற்றுவதில் ஆளும் கட்சியான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில் தங்கள் கோட்டை என மார்தட்டிக்கொள்ளும் அ.தி.மு.க.வினருக்கு கோவை மாவட்டத்தில், வாக்குப் பதிவுக்கு முன்பே அதிர்ச்சி வைத்தியத்தை அளித்திருக்கிறது தி.மு.க.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், வார்டு எண் 3, 6, 7, 8, 9, 11, 12, 14,15 ஆகிய 9 வார்டுகளில் 8 தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் ஆகியோரை எதிர்த்து தாக்கல் செய்திருந்த அனைத்து வேட்பாளர்களும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இதன் காரணமாக 3வது வார்டில் எம்.பிரியா, 6வது வார்டில் ஜெ.பரமேஸ்வரி, 7வது வார்டில் என்.தேவிகா, 8வது வார்டில் கே.நந்தவேல்முருகன், 11வது வார்டில் ஆர்.கஸ்தூரி, 12வது வார்டில் டி.கலைமணி, 14வது வார்டில் ப.நாகராஜ் 15வது வார்டில் ஆர்.சபரீஸ்வரன் என 8 தி.மு.க. வேட்பாளர்களும், 9வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ஆர்.ரவி என்பவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனால் மொத்தமுள்ள 15 வார்டுகளில் பெருபான்மை வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதால் நெகமம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. வார்டு எண் 1. 2, 4, 5, 10, 13 ஆகிய 6 வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் கூறியதாவது, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து முதல்வர் மக்களுக்காக இரவு, பகலாக உழைத்து வருகிறார். அவரது நல்லாட்சியின் மேல் நம்பிக்கை வைத்து மக்கள், பெரிய நெகமம் பேரூராட்சியின் வெற்றியை தி.மு.க.வுக்கு பரிசாக அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெரிய நெகமத்தைச் சேர்ந்த தி.மு.க.வினர் கூறுகையில், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, நம் மாவட்டத்தில் முழு வெற்றி பெறுவோம் என உறுதிபடக் கூறியுள்ளார். ஆகவே இது ட்ரெய்லர் தான், இனிமேல்தான் மெயின் பிக்சரே இருக்கு என்று சினிமா பாணியில் உற்சாகமாக பேசிக்கொள்கின்றனர்.