வாடகை பாக்கி: கடைகளை பூட்ட வியாபாரிகள் எதிர்ப்பு
குற்றாலத்தில் வாடகை பாக்கிக்காக கோவில் நிர்வாகம் கடைகளை பூட்டுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றால நாதர் கோவிலுக்குச் சொந்தமாக 180 வகையான கட்டிடம் மற்றும் காலிமனைகள் உள்ளது. இந்த கட்டடங்கள் மற்றும் காலிமனைகளில் வர்த்தகம் செய்வோர் கடந்த சில ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்திற்கு வாடகை பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது வரை ரூ. 5 கோடியே 86 லட்சத்துக்கும் அதிகமான தொகை பாக்கியாக உள்ளது. இதில் அதிக பாக்கி உள்ள கடைகளை பூட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள 3 கடைகளை கோவில் நிர்வாகத்தினர் பூட்டி சீல் வைத்தனர்.
அப்போது அங்கு ஒன்றுதிரண்ட வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், கொரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்த சூழ்நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி கடைகளை பூட்டி சீல் வைப்பது நியாயமற்ற செயல் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் தொடர் நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வீரமணி,
குற்றாலம்.