இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மாநிலம் முழுதும் 57 ஆயிரத்து 778 பேர் களத்தில் உள்ளனர். மனு தாக்கல் செய்த 14 ஆயிரத்து 324 பேர் போட்டியில் இருந்து விலகினர். போட்டியின்றி 218 பேர் கவுன்சிலராக தேர்வாகியுள்ளனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளில், 12 ஆயிரத்து 838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகிற 19ம் நடக்கிறது.
வேட்பு மனு தாக்கல் ஜனவரி மாதம் 28ம் தேதி துவங்கி இம்மாதம் 4ம் தேதி முடிந்தது. மொத்தம் 74 ஆயிரத்து 416 மனுக்கள் பெறப்பட்டன. போதுமான ஆவணங்கள் இல்லாததால் 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பேரூராட்சிகளில் 6,822 பேர், நகராட்சிகளில் 4,723 பேர், மாநகராட்சிகளில் 2,779 பேர் மனுக்களை திரும்பப் பெற்றனர்.
மாநகராட்சிகளில் நான்கு பேர், நகராட்சிகளில் 18 பேர், பேரூராட்சிகளில் 196 பேர் என மொத்தம் 218 பேர் கவுன்சிலர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியின் 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. தற்போது, 1,370 மாநகராட்சி கவுன்சிலர், 3,825 நகராட்சி கவுன்சிலர், 7,412 பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
மாநகராட்சிகளில் 11 ஆயிரத்து 196 பேர், நகராட்சிகளில் 17 ஆயிரத்து 922 பேர், பேரூராட்சிகளில் 28 ஆயிரத்து 660 பேர் போட்டியில் உள்ளனர். மொத்தமுள்ள 12 ஆயிரத்து 607 பதவிகளை கைப்பற்ற, 57 ஆயிரத்து 778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.