கோட்டூர் பேரூராட்சியில் 100 சதவிகித வெற்றி – தி.மு.க. சபதம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன், மொத்தமுள்ள 21 வார்டுகளிலும் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், நமது முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை மக்கள் நலனில் அக்கறை கொண்டு அயராது பாடுபட்டு வருகிறார்.
அவரின் பணிகளை அறிந்த அனைத்து தரப்பு மக்களும் அவரை பாராட்டுகின்றனர்.
இன்னும் அவர் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது, கல்வி தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.
ஆகவே வெறும் 8 மாத காலத்தில் அவர் புரிந்துள்ள சாதனைகளை மக்களிடத்திலே எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும்.
கோட்டூர் பேரூராட்சியை பொருத்தவரை 21 வார்டுகளிலும் நமது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றே ஆகவேண்டும். 100 சதவிகித வெற்றி என்பது உறுதி. இருந்தாலும் தேர்தல் களப்பணியில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேர்தல் பணி பொறுப்பாளர்கள் பரமத்தி ஒன்றிய செயலாளர் கருணாநிதி, துணைச் செயலாளர் வடிவேலு, கோவை தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் தனபாலகிருஷ்ணன், ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், கோட்டூர் நகர பொறுப்பாளர் பால்ராஜ், தென்சங்கம்பாளையம் ஊராட்சித் தலைவர் அண்ணாதுரை, பொள்ளாச்சி நகர துணை செயலாளர் கார்த்திகேயன், கெங்கம்பாளையம் வீரப்பன், புளியம்பட்டி ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.