வேலு நாச்சியார் அலங்கார ஊர்திக்கு
மலர்கள் தூவி வரவேற்பு.
ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் “விடுதலை போரில் தமிழகம்” என்ற தலைப்பில் 3 அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என்றும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்திகள் மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பினை போற்றி, பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் விடுதலைப்போரில் தமிழகம் என்ற தலைப்பில் 3 அலங்கார ஊர்திகள் இடம்பெற்றிருந்தன. மாவட்ட தலைநகரங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி தேனி மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காட்ரோடு பைபாஸ், வத்தலகுண்டு ஈடர்ன் கார்டன், செம்பட்டி – பழனி பைபாஸ் வழியாகச்சென்று திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகில் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியினை மலர்கள் தூவி வரவேற்று பார்வையிட்டார்.
தொடர்ந்து அலங்கார ஊர்தியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் மலர்கள் தூவி பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், உதவி ஆட்சியர்(பயிற்சி) பிரியங்கா, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் காசிசெல்வி, வட்டாட்சியர்கள் திண்டுக்கல் மேற்கு ரமேஷ்பாபு, திண்டுக்கல் கிழக்கு சந்தனமேரி கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள். மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் ரியாஸ்,
திண்டுக்கல்.