வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் அமைச்சர் உறுதி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வார காலமே அவகாசம் உள்ள நிலையில் மாநிலம் முழுவதிலும் பிரச்சாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய இரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நெகமம், ஜமீன் ஊத்துக்குளி, ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், கோட்டூர், சமத்தூர், சூளேஸ்வரன்பட்டி ஆகிய பேரூராட்சிகளிலும் பொள்ளாச்சி நகராட்சிக்கு பல்லடம் ரோடு சந்திப்பிலும் அவர் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதில் பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசியபோது, 58 ஆண்டுகளுக்கு முன்பு இதே பொள்ளாச்சி நகராட்சியை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து தி.மு.க. கைப்பற்றியதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
58 ஆண்டுகளுக்கு முன்பே சாதித்த நம்மால் இப்போது சாதிக்க முடியாதா..?.
நமது தமிழக முதல்வர் முழு நேரமும் மக்கள் நலனைப் பற்றியே சிந்தித்து வருகிறார், செயல்பட்டும் வருகிறார்.
தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே பொள்ளாச்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தந்தவர்கள் தயக்கமே இல்லாமல் இங்கு தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வெறும் 8 மாதங்களில் நம் முதல்வர் சாதித்துள்ளதை அனைத்துத் தரப்பு மக்களும் நன்கு அறிவர்.
ஆகவே இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களின் முழு ஆதரவோடு நாம் தான் வெற்றி பெறப் போகிறோம், நாம் மட்டும் தான் வெற்றி பெறப் போகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் டாக்டர்.மகேந்திரன், நகர பொறுப்பாளர் வடுகை பழனிச்சாமி, துணைச்செயலாளர் கார்த்திகேயன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் நித்யானந்தம் உட்பட பலர் உடனிருந்தனர்.