வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் ஒதுக்கீடு
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முறையாக செய்து வருகிறது.
இதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான தாணுமூர்த்தி தலைமையில் இப்பணி நடைபெற்றது. நகராட்சியின் கணினி உதவி திட்ட அலுவலர் பிரகாசம், மொத்த வாக்குச்சாவடிகள், அதில் ஆண், பெண் வேட்பாளர்கள் வார்டுகள், இந்த வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடிகள் ஆவி ஆகியவை குறித்தும், அவற்றை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்வது குறித்தும் வேட்பாளர்களிடம் விளக்கம் அளித்தார். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு விளக்கக் கையேடுகள் வழங்கப்பட்டன.