மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா – பாதுகாப்பு குறித்து ஆலோசனை
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற 14ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் மயான பூஜை நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் 17ம் தேதி காலை 9 மணிக்கு மேல் துவங்குகிறது.
இந்நிலையில் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமையில் நடைபெற்றது. ஆனைமலை தாசில்தார் பானுமதி, கோவில் உதவி ஆணையாளர் கருணாநிதி, வால்பாறை சரக காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் காவல்துறை, அரசு போக்குவரத்து கழகம், நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, மின்வாரியம், ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும், அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இதில், கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல கூடுதல் பேருந்து வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்தில் மாற்றம் உள்ளிட்ட திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.