சாட்டையை சுழற்றிய தலைவர் – பம்பரமாய் சுழலும் நிர்வாகிகள்
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் தோற்றால் நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என்ற தி.மு.க. தலைவரின் அதிரடி அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருிற 19ம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து களம் இறங்கியுள்ளன. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றுவதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. உள்ளாட்சியிலாவது தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று போராடி வருகிறது.
அதேசமயம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ள தி.மு.க. உள்ளாட்சியிலும் தனது செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதில் தி.மு.க. தரப்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்ததில் பல இடங்களில் குழப்பங்கள் ஏற்பட்டன. கட்சிக்காக பாடுபட்டவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு வேண்டியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. பல இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தி.மு.க. வினர் சுயேட்சைகளாக களம் இறங்கியதும் இதனை உறுதி செய்யும் விதமாகவே உள்ளது.
வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கள நிலவரம் குறித்து தி.மு.க. தலைமைக்கு சில எதிர்மறையான தகவல்கள் சென்றன. சில நிர்வாகிகளின் செயல்பாட்டால் வாய்ப்புள்ள இடங்கள் கூட கை நழுவலாம் என்றே தலைமைக்கு சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி பொள்ளாச்சியில் தி.மு.க.வினராலேயே முற்றுகையிடப்பட்ட சம்பவங்களும் தலைவரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில்தான் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெற்றி வாய்ப்பை இழக்கும் தி.மு.க. வேட்பாளர்கள் உள்ள பகுதிகளில் அதற்கு பொறுப்பான நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு.
கட்சித் தலைவர் இவ்வாறான அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது நிர்வாகிகளிடையே, குறிப்பாக தலைமைக்கு தெரியாமல் தனி ஆவர்த்தனம் செய்த நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் இதுவரை தேர்தல் பணியில் அலட்சியமாக இருந்த நிர்வாகிகள் தற்போது அதிகாலை துவங்கி இரவு வரை வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தல், தேர்தல் பணி குறித்து சக நிர்வாகிகளுடன் ஆலோசனை என்று வேகமெடுத்துள்ளனர்.