பெண்ணை வழிமறித்து செயின் பறித்த இரு வாலிபர்கள் கைது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வசந்தி தனியார் நூல் மில் அருகே தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது, 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து அவர் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வெப்படை பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அதில் இருவரும் தேவனாங்குறிச்சியை சேர்ந்த டேவிட் (27), அருண் (23) என்பதும், வசந்தியிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் தேவராஜன்,
நாமக்கல்.