அங்கன்வாடி முறைகேடு விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு
அரசு விதிகளுக்கு புறம்பாக அங்கன்வாடியில் ஊழியர் நியமிக்கப்பட்ட விவகாரத்தை முதல்வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரம் நயினாரகரம் ஊராட்சிக்குட்பட்ட துரைசாமிபுரம் அருகே உள்ள காமராஜபுரத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஒரு பணியாளர், ஒரு உதவியாளர் இருவர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதில் அரசு விதிகளுக்கு புறம்பாக அப்பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஒருவரின் மனைவியை கூடுதலாக பணியமர்த்தி உள்ளனர். கூடுதல் பணியாளருக்கு மாத ஊதியம் 3 ஆயிரம் நிர்ணயம் செய்து அந்த ஊதியத்திற்கு அங்கு பயிலும் குழந்தைகளின் பெற்றோரிடமே வசூல் செய்த கொடுமை அரங்கேறி வந்துள்ளது.
ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் தலா 150 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட ஒருவர் பேசிய ஆடியோ வைரலானதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுதொடர்பாக தீவிர புலனாய்வு செய்த விசில் மீடியாவின் சிறப்பு செய்திப்பிரிவு குழு முழு விளக்கத்துடன் செய்தியையும் வெளியிட்டது.
இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தது, நமது செய்தியாளர்களை மிரட்டவும் தொடங்கினர்.
இதற்கிடையே அங்கன்வாடி மையங்களுக்கு பொறுப்பு வகிக்கும் பெண் அதிகாரி, கூடுதலாக நியமிக்கப்பட்ட பெண் ஊழியரை பணியிலிருந்து நிறுத்தி விட்டோம் அவரிடம் எழுதி வாங்கி விட்டோம் என்றெல்லாம் சமாளிப்பு பதில்களைக் கூறி வருகிறார்.
ஆகவே இன்னும் இதுபோன்ற பல முறைகேடுகள் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஆகவே இந்த விவகாரத்தை தமிழக முதல்வரின் நேரிடை பார்வைக்கு கொண்டு செல்வது என விசில் மீடியாவின் சிறப்பு செய்திப்பிரிவு குழு முடிவு செய்துள்ளது.
ஆகவே இந்த விவகாரத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.