வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி துவக்கம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாளை (19ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கென மாநிலம் முழுவதிலும் மொத்தம் 31 ஆயிரத்து 29 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
ஒரு வாக்குச்சாவடிக்கு 4 அலுவலர்கள் வீதம் மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுவார்கள். இத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக 55 ஆயிரத்து 337 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அவற்றை அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி துவங்கியுள்ளன.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் 89 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தேவையான 89 இயந்திரங்கள் மற்றும் அவசரத் தேவைக்கு கூடுதலாக 18 எந்திரங்கள் என மொத்தம் 107 வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
அதேபோல் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், கோட்டூர், சமத்தூர், ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, பெரிய நெகமம் ஆகிய பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியும் துவங்கியுள்ளது.