லாபம் தரும் சமவெளி மிளகு சாகுபடி பயிற்சி
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூர் சரளைபதி பகுதியில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
விவசாயிகளின் வருவாயை மேம்படுத்தும் நோக்கில் சமவெளியில் மிளகு சாகுபடி செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்த சுமார் 700 விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.
மிளகு செடியானது மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், சமவெளியிலும் மிளகு சாகுபடி சாகுபடி செய்து நல்ல லாபம் பார்க்க முடியும் என்பதை புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பலர் நிரூபித்துள்ளனர்.
இதனை பிற மாவட்ட விவசாயிகளும் அறிந்துகொள்ளும் வகையில், ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் இந்தப்பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முன்னோடி விவசாயிகளான பாலுசாமி, செந்தமிழ் செல்வன் மற்றும் கடலூர் மாவட்ட முன்னோடி விவசாயி திருமலை ஆகியோர் பங்கேற்று விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
தென்னை மற்றும் டிம்பர் மரங்களில் மிளகு கொடி ஏற்றி அதிக மகசூல் எடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை விளக்கமாக கூறினர்.
ஏற்கனவே நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு மிளகு சாகுபடி செய்துள்ள வள்ளுவன் என்பவரது பண்ணையில் இப்பயிற்சி நடைபெற்றது. அவரும் தனது அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டார்.