தொண்டாமுத்தூர் பேரூராட்சியை தூக்கிய தி.மு.க.
தொண்டாமுத்தூர் பேரூராட்சியை தி.மு.க. வென்றுள்ளதால் முன்னாள் அ.தி.மு.க .அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிர்ச்சியில் உள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கோவையில் உள்ள 10 சட்டசபை தொகுதியிலும் தி.மு.க. தோல்வி அடைந்தது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
அதில் கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 12 வார்டுகளை தி.மு.க. பிடித்துள்ளது. இரு வார்டுகளில் மட்டும் அ.தி.மு.க. வென்றுள்ளது. இதன் மூலம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியை தி.மு.க. தன்வசப்படுத்திவிட்டது. தொண்டமுத்தூரின் எம்.எல்.ஏ. வாக இருப்பவர் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி. தேர்தல் பிரச்சாரம் மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளிலும் அ.தி.மு.க. வினர் குறிப்பாக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உள்ளிட்டோர் கோவை மாவட்டம் அ.தி.மு.க. வின் கோட்டை என்று அடிக்கடி கூறி வந்தனர்.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் மேற்கு மண்டலத்தை எப்படியும் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாற்ற தி.மு.க. தலைமை வியூகம் வகுத்தது. அதன்படி அ.தி.மு.க. வின் கோட்டையாக உள்ள மேற்கு மண்டலத்தின் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார்.
இதில் அமைச்சர் பாலாஜி அதிரடியாக களப்பணியாற்றியதால், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33ல் 31 பேரூராட்சிகளையும் தி.மு.க. தனது வசமாக்கி கொண்டது. தனது தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர் பேரூராட்சியையும் தி.மு.க. கைப்பற்றியது முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.