11 மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட பிரேதம் – பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணியை சேர்ந்தவர் மைதீன் பீவி. இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மைதீன் பீவியும், கோபிகிருஷ்ணனும் வீரசிகாமணிக்கு குடிபெயர்ந்தனர். இந்நிலையில் கடந்த 26.03.2021 அன்று மைதீன் பீவி குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மாடி படியில் தவறி விழுந்து இறந்ததாக கோபிகிருஷ்ணன் மைதீன்பீவியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இறுதி சடங்குகள் முடித்து மைதீன்பீவியின் சடலத்தை வீரசிகாமணியில் உள்ள கோபி கிருஷ்ணனுக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் புதைத்துத்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மைதீன் பீவியின் தங்கை பீர்பாத்திமா தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் ஏற்கப்படாததால் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மைதீன் பீவியின் உடலை தோண்டி எடுத்து இன்று உடற்கூறு ஆய்வு செய்ய படுகிறது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அரசு மருத்துவர் செல்வ முருகன் தலைமையிலான மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூறு ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
11 மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட மைதீன் பீவியின் உடலை இன்று தோண்டி எடுத்துஉடற்கூறு ஆய்வு செய்யப்படுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.