ஒடிசாவில் இருந்து சொகுசு பஸ்சில்
கடத்தி வந்த 553 கிலோ குட்கா பறிமுதல்!
கோவை கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே சொகுசு பஸ் ஒன்று நின்று கொண்டிருப்பதாகவும், அதில் இருந்து ஏராளமான மூட்டைகளை காருக்கு மாற்றுவதில் சந்தேகம் இருப்பதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கருமத்தம்பட்டி
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை,
சப்-இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் மற்றும்
ஞானவேல் உள்ளிட்ட போலீசார் அந்த பகுதிக்குச் சென்று பஸ் மற்றும் காரை சோதனையிட்டனர். அதில் 10 மூட்டைகளில் 553 கிலோ குட்கா, ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார்
உடனடியாக சொகுசு பஸ் மற்றும் காரை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துவந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சொகுசு பஸ்சை ஓட்டி வந்தது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த முருகன், மற்றொரு டிரைவர்
மதுரையைச் சேர்ந்த செல்வம் என்பதும், கோவை டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்த இம்ரான்கான் என்பவர் ஒடிசா மாநிலத்தில்
இருந்து குட்காவை வாங்கி சொகுசு பஸ்சில் கடத்தி வந்து, காரில் கோவை
கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. பஸ் டிரைவர்கள் செல்வம் மற்றும் முருகன் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான குட்கா வியாபாரியான இம்ரான்கான் மற்றும் அன்னூர் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் பாபு ஆகிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.