கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துங்கள்
கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டும் என்று வெற்றி பெற்ற சி.பி.எம். மன்ற உறுப்பினர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றி பெற்ற மன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மன்ற உறுப்பினருக்கு உண்டான அதிகாரத்தை பயன்படுத்தி கல்வி நிலையைங்களை மேம்படுத்துவதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார் .
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை மாநகராட்சியின் 12வது வார்டு வி.இராமமூர்த்தி, 24வது வார்டு ஆர்.பூபதி, 13வது வார்டு என்.சுமதி, 28வதுவார்டு கண்ணகி ஜோதிபாசு ஆகியோரும், காரமடை நகராட்சி 1வது வார்டில் ரா.பிரியா, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 8வது வார்டில் என்.சிவராஜ், 1வது வார்டில் உமாதேவி, இருகூர் பேரூராட்சியின் 8வது வார்டில் ஸ்டாலின்குமார், 3வது வார்டில் ராஜேஷ்வரி சண்முகம், அன்னூர் பேரூராட்சி 8வது வார்டில் முகமது முசீர், 5வது வார்டில் மணிகண்டன், சூலூர் பேருராட்சியின் 7வது வார்டில் எம்.வேலுச்சாமி, இடிகரை பேருராட்சி 13வது வார்டில் கற்பகம் குப்புராஜ், வேட்டைக்காரன் புதூர் 15வது வார்டில் சாத்துக்குட்டி ஆகிய 14 பேர் கோவை மாவட்டத்தில் மன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் வெற்றிபெற்ற மன்ற உறுப்பினர்கள் அனைவரும் காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தின் கோவை மாவட்டத்தின் முடிவுகளை தமிழகத்தின் அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் பத்து சட்டமன்ற தொகுதிகளையும் நாங்கள் வென்றோம், உள்ளாட்சி தேர்தலிலும் அனைத்தையும் நாங்கள்தான் வெல்வோம் என்கிற மமதையோடு அ.தி.மு.க.வும், நாங்கள்தான் எல்லாம் என்கிற வெற்று கொக்கரிப்போடு பா.ஜ.க.வும் இருந்தது. ஆனால் தமிழகத்திலேயே கோவை மாநகராட்சியில் மிகக்குறைந்த அளவிற்கு 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற அ.தி.மு.க., ஒரு இடங்களிலும் வெற்றி பெறாதது மட்டுமல்லமல் 86 வார்டுகளில் டெபாசிட் இழந்த பா.ஜ.க. என தேர்தல் களம் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை அள்ளி வழங்கியுள்ளது. மாநகராட்சியில் மட்டுமல்லாது, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அத்தகைய வெற்றியை ஈட்டி வந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றியாளர்களுக்கு கட்சியின் மாநிலக்குழுவின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி என்பது மிகப்பெரியது. நேரிடையாக மக்களை சந்திப்பதில் சிரமம் உள்ளது. ஆனால் அன்றாடம் மக்களோடு இருப்பவர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை பெற்றுள்ள நமது கட்சியின் உறுப்பினர்கள் மக்களின் அன்றாட அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் மன்ற உறுப்பினர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி நமது பகுதியில் உள்ள கல்வி நிலையங்களை மேம்படுத்தவும், தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.