அரிய வகை சங்குகள் பறிமுதல் – 2 பேர் கைது.
தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த அரிய வகை சங்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரை கைது செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக அரிய வகை சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி ரயில் நிலைய பகுதி மற்றும் கடலோர பகுதிகளில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நிலைய பகுதியில் சந்தேகப்படும்படி ஆட்டோ ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதிகாரிகள் ஆட்டோவை சோதனை செய்கையில், அதில் அட்டைப்பெட்டிகளில் மூடை மூடையாக தடைசெய்யப்பட்ட சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடத்தலில் ஈடுபட்ட முஹம்மது ஹுசைன், மீராஷா மரைக்காயர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சங்குகளும் ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்டு மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக வன அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட சங்குகளில் 400 அரியவகை மாட்டுத்தலை சங்கு, குதிரை முள்ளி சங்கு, ஐவிரல் சங்கு, அன்னாசிப்பழ சங்கு என மொத்தம் சுமார் 3000 சங்குகள் பிடிபட்டுள்ளது. இதில் மாட்டுத்தலை சங்கு மட்டும் தடைசெய்யப்பட்ட சங்கு வகை பட்டியலில் உள்ளது. பிடிப்பட்ட சங்குகளின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. பிடிப்பட்ட இரண்டு பேர் தவிர சையது அசார், சாகுல் ஹமீது ஆகிய இருவர் தலைமறைவாக உள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு தெரிவித்தனர்.
செய்தியாளர் மாரிராஜா,
தூத்துக்குடி.