வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி – 5 பேர் கைது
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டம் உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட டாப்சிலிப் பகுதியில் சிலர் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து டாப்ஸ்லிப் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனவர்கள் சபரீஸ்வரன், பிரபாகர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் கொண்ட தனிப்படையினர்
மஞ்சள் போர்டுபள்ளம் என்கிற காப்பு வனப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இரு சந்தன மரங்களை வெட்டி துண்டுகளாக்கி, அவற்றை தலைச்சுமையாக காண்டூர் கால்வாய் பகுதிக்கு 3 பேர் எடுத்து வருவது தெரியவந்தது. மேலும் சந்தன மரத்தை கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் கார் ஒன்றும் நின்று கொண்டிருந்தது.
சுதாரித்துக்கொண்ட வனத்துறையினர் மரங்களை வெட்டிக் கொண்டு வந்த 3 நபர்கள் மற்றும் காரில் இருந்த 2 நபர்கள் என ஐந்து பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் வெங்கடேஷ், முகமதுபசீர், மணிகண்டன், சக்கரவர்த்தி, அன்பழகன் என்பதும், இவர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தி கேரளாவுக்கு கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது.
5 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்கள் வெட்டிக்கொண்டு வந்த 73 கிலோ எடை கொண்ட 39 சந்தன மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இக்கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு தலைமறைவாக உள்ள கேரளா மாநிலம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த கொழிஞ்சாம்பாறை ஹவுஸ் என்ற முகவரியில் வசித்து வரும் மூசாஹாஜி எனன்பவரின் மகன் அப்துல் சலீம் என்பவரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.