மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலை
நாகூரில் மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலையை கைப்பற்றிய வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் நாகூர் மேல பட்டினச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் காந்தி. இவர் வழக்கம் போல் தனது பைபர் படகை எடுத்துக் கொண்டு நாகூர் வெட்டாறில் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது வலையை படகில் இழுத்து பார்த்த போது இவரது வலையில் கனமான பொருள் ஒன்று இருப்பதை கண்டார். பின்னர் வலையில் இருந்து அதனை வெளியே எடுத்து பார்த்தபோது அது 4 அடி உயரமுள்ள பெருமாள் சுவாமிசிலை என தெரியவந்தது. இதையடுத்து மீனவர் காந்தி அளித்த தகவலின்பேரில் பனங்குடி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நாகை தாசில்தார் ஜெயபாலன் ஆகியோர் வெட்டாறு வந்தனர். பின்னர் மீனவர் காந்தி ஒப்படைத்த பெருமாள் சுவாமி சிலையை வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றி நாகை தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். நாகூரில் மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சுவாமி சிலை எந்த கோவிலில் இருந்து காணாமல் போன சிலை என்பது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். மீனவரின் வலையில் பெருமாள் சுவாமி சிலை சிக்கிய சம்பவம் நாகூர் மேல பட்டினச்சேரி கிராம மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் ராஜேஷ்
நாகை மாவட்டம்.