காயத்துடன் தவித்த யானைக்கு மருத்துவ சிகிச்சை.
டாப்சிலிப்பில் காயத்துடன் திரியும் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது டாப்ஸ்லிப் வனச்சரகம். இச்சரகத்திற்கு உட்பட்ட
கோழிக்கமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் அருகே காட்டு யானை ஒன்று கடந்த 4 நாட்களாக ஒரே இடத்தில் சுற்றித் திரிகிறது.
வளர்ப்பு யானைகளை மேய்ச்சலுக்காக வனத்திற்குள் அழைத்துச்செல்லும் பாகன்கள் அந்தக் காட்டு யானையின் அருகே சென்று பார்த்துள்ளனர். இதில் அந்த யானையின் பின்னங்காலில் பெரிய அளவிலான காயம் ஒன்று இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த யானை வேறு எங்கும் செல்லாமல் ஒரே இடத்திலேயே கண்ணீர் வடித்தபடி நின்று கொண்டிருக்கிறது.
இதுகுறித்து அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் யாரும் காயம்பட்ட யானையை கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டாப்சிலிப் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் கால்நடை மருத்துவர் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கும்கி யானையின் உதவியுடன் காயம்பட்ட காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணி துவங்கியுள்ளது.