ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்தில் அருங்காட்சியகம் .
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது என்று மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட டெல்லி தொல்லியல் துறை இயக்குனர் அஜய் யாதவ், இணை இயக்குனர் சஞ்சை குமார் மஞ்சில், மத்திய தொல்லியல்துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் ஆகியோர் வருகை தந்தனர். இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் உடன் இருந்தார்.
இவர்கள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள் நடந்து வரும் 4 இடங்களையும் பார்வையிட்டனர். மேலும் ஆதிச்சநல்லூரில் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளையும் பார்வையிட்டு ஆய்வாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வுகள் குறித்து அறிவுறுத்தினர்.
அதன்பின்னர் மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.
இங்கு 52 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐந்து மாதிரி அருங்காட்சியம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. அதில் தென்னிந்தியாவில் ஆதிச்சநல்லூரும் ஒன்று. இங்கு அறிவியல் பூர்வமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட இடங்களை மட்டும் “உள்ளது உள்ளபடியே” என்ற அடிப்படையில் “சைட் மியூசியம்” அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இது போக இங்கு நிரந்தரமாக ஒரு இடத்தில் அருங்காட்சியம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது என்றாா்.
செய்தியாளர் மாரி ராஜா,
தூத்துக்குடி.