உற்சாகத்துடன் பதவியேற்ற கவுன்சிலர்கள்
நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் என்று உற்சாகத்துடன் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களே அதிக இடங்களை கைப்பற்றினர்.
இத்தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 36 வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் 5 வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் தேவகியைத் தவிர 35 கவுன்சிலர்களும் உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டனர்.
நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் தமிழ்மணி, முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சந்திரசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், கோட்டூர், சமத்தூர், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, பெரிய நெகமம் மற்றும் கிணத்துக்கடவு ஆகிய பேரூராட்சிகளிலும் அந்தந்த செயல் அலுவலர்கள் தலைமையில் கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆனைமலை வட்டாரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் யுவராஜ், ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தலிங்க குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.