ஒரு ஓட்டில் தலைவர் பதவியைக் கைப்பற்றிய கவுன்சிலர்: பேரூராட்சியில் பரபரப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளரும், ஒரு வார்டில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றனர். தி.மு.க. பேரூர் கழக செயலாளர் ஆறுச்சாமியின் மகளான கவுன்சிலர் ரோகிணியை
இப்பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு தி.மு.க. தலைமை அறிவித்தது. இதற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் இடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் இன்று தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் பெரும் பரபரப்பு நிலவியது. செயல் அலுவலர் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் தலைமை அறிவித்த ரோகிணியும், கவுன்சிலர் வனிதா ஜெயபால் என்பவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இம்மறைமுக தேர்தலில் வனிதா ஜெயபால் 8 வாக்குகளும், ரோகினி 7 வாக்குகளும் பெற்றனர். ஒரு ஓட்டு கூடுதலாகப் பெற்ற வனிதா ஜெயபால் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சித் தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆரவாரமாக கோஷம் எழுப்பி, பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனைமலை:
ஆனைமலை பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 17 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்களும் ஒரு வார்டில் மட்டும் அ.தி.மு.க. வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.
இதனை அடுத்து தி.மு.க. தலைமை அறிவித்தபடி முன்னாள் பேரூராட்சித் தலைவர் சாந்து என்கிற சாந்தலிங்க குமாரின் மனைவி கவுன்சிலர் கலைச்செல்வி ஆனைமலை பேரூராட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சக கவுன்சிலர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பெரிய நெகமம்:
பெரிய நெகமம் பேரூராட்சியில் பெரிய மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் ஒரு சுயச்சை கவுன்சிலர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 6 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. இதில் 5 தி.மு.க. கவுன்சிலர்களும் ஒரு சுயேச்சை கவுன்சிலரும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தி.மு.க. தலைமை அறிவித்தபடி முன்னாள் பேரூராட்சி தலைவர் சபரி கார்த்திகேயன் மனைவி கவுன்சிலர் ஆர்த்தி சபரி பெரிய நெகமம் பேரூராட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.