செய்திகள்

விசுவாசத்தின் பரிசு – நகர்மன்றத் தலைவர்

நகர்மன்றத் தலைவர் ஆகிறார் கல்லூரி பேராசிரியை

கட்சிக்கு விசுவாசமான தொண்டனின் மனைவியை நகர்மன்றத் தலைவராக்கி அழகு பார்த்துள்ளது தி.மு.க. தலைமை.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பெரும்பான்மை இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. இத்தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 2ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் முறைப்படி நடைபெற்றது. பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய தி.மு.க., தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான வேட்பாளர்களை முன்னதாகவே அறிவித்தது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அனைத்து கவுன்சிலர்களுக்கும் தலைமை உத்தரவிட்டிருந்தது.
36 வார்டுகளைக் கொண்ட பொள்ளாச்சி நகராட்சியில் 31 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 2 வார்டில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 3 வார்டுகளில் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
பொள்ளாச்சி நகராட்சியின் தலைவர் பதவியைக் கைப்பற்ற பலரும் பல வகையில் தீவிரமாக முயற்சித்தனர்.
இந்நிலையில் கட்சிக்கு விசுவாசமாக உழைத்து வருபவரும், முன்னாள் நகராட்சி கவுன்சிலருமான நவநீதகிருஷ்ணன் என்பவரின் மனைவி சியாமளாவை நகர்மன்றத் தலைவராக தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்த சியாமளா பொள்ளாச்சி நகராட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து கவுன்சிலர் கவுதமன் துணைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், தி.மு.க. வுக்காக பலரும் விசுவாசமாக பாடுபட்டு வருகின்றனர். அதில் பொள்ளாச்சியை பொருத்தவரை நவநீதன் தி.மு.க.வின் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார். கடந்த பத்தாண்டு கால அராஜக அ.தி.மு.க. ஆட்சியை கடுமையாக எதிர்த்துப் போராடியவர் நவநீதகிருஷ்ணன்.
குறிப்பாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு வெளிச்சத்துக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமானவர். இவர் எடுத்த தீவிர முயற்சியால் பாலியல் வழக்கில் தொடர்புடைய பலர் இன்று சிறையில் உள்ளனர். இவ்வாறு கட்சிக்காக விசுவாசமாக பாடுபடுபவர்கள் யார் என்பது கட்சித் தலைமைக்கு நன்றாகவே தெரியும். ஆகவேதான் அவருக்கு இந்த நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. என்றார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button