போலீஸ் தடையை மீறி பேரூராட்சி அலுவலகத்திற்குள் மக்கள் புகுந்ததால் பரபரப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளரும், ஒரு வார்டில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றனர். தி.மு.க. பேரூர் கழக செயலாளர் ஆறுச்சாமியின் மகளான கவுன்சிலர் ராகிணியை
இப்பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு தி.மு.க. தலைமை அறிவித்தது. இதற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. செயல் அலுவலர் சந்தனம்மாள் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் தலைமை அறிவித்த ராகிணியும், கவுன்சிலர் வனிதா ஜெயபால் என்பவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இம்மறைமுக தேர்தலில் வனிதா ஜெயபால் 8 வாக்குகளும், ரோகினி 7 வாக்குகளும் பெற்றனர். ஒரு ஓட்டு கூடுதலாகப் பெற்ற வனிதா ஜெயபால் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சித் தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பு கவுன்சிலர்களில் சிலர் வாக்குச்சீட்டுகளை பறித்துக் கொண்டு வெளியே சென்றனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தலின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை உடனடியாக அனுப்பும்படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் பேரூராட்சி அலுவலகத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை எடுக்க முடியாமல் அலுவலர்கள் தடுமாறினர். இதனால் முடிவுகளை அறிவிப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
முடிவுகளை தெரிந்து கொள்ள காலை 10 மணியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக பேரூராட்சி அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்தனர். செயல் அலுவலரின் குழப்பமான செயல்பாட்டால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மாலை சுமார் 6:45 மணி ஆகியும் முடிவுகள் அறிவிக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் போலீஸ் தடையை தகர்த்துக்கொண்டு கேட்டைத்தள்ளி ஆவேசமாக பேரூராட்சி அலுவலக வளாகத்திற்குள் புகுந்தனர்.
முடிவுகளை அறிவிக்க வேண்டும், வாக்குச்சீட்டுகளை கிழித்த ஆறுச்சாமியை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.