நகராட்சித் தலைவரின் முதல் ஆய்வுப்பணி பள்ளியில் தொடக்கம்
பொள்ளாச்சி நகராட்சித் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சியாமளா நவநீதகிருஷ்ணன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுப் பணியை மேற்கொண்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சியின் தலைவராக சியாமளா நவநீதகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இவர் தனது முதல் பணியாக கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
இப்பள்ளியில் 755 மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 2006 – 2011ம் ஆண்டில் தி.மு.க. வைச் சேர்ந்த ராஜேஸ்வரி நகர்மன்றத் தலைவராக இருந்தபோது இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளியின் வகுப்பறைகள், கழிப்பிடங்கள், ஆய்வகம், விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளி வளாகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின் நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறியதாவது, பள்ளியில் சுகாதாரமான குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வகத்தில் பழுதடைந்த கணினிகளை சீரமைப்பது, துப்புரவு பணிகளுக்கான ஊழியர்கள் மற்றும் பிற பணிகளுக்கான அலுவலர்களை நியமிப்பது உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. மாணவிகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பள்ளியை சீரமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் சிறிது கூட அக்கறை இல்லாமல் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற இந்த பள்ளியை மாட்டுக் கொட்டகையை போல் சீரழித்து வைத்துள்ளனர். முதற்கட்டமாக பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து காவலாளி நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்று இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது நகராட்சியின் துணைத்தலைவர் கௌதமன், கவுன்சிலர்கள் பாத்திமா, ஜோதிமணி, சண்முகபிரியா, சரிதா, பள்ளித் தலைமை ஆசிரியை தேன்மொழி உட்பட பலர் உடனிருந்தனர்.