சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி: போலீசில் சிக்கினார் கால் முறிந்தவர்
பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே உள்ள பணப்பெட்டியைச் சேர்ந்தவர் தனபால். இவர் தனக்குச்சொந்தமான தோட்டத்தில் சில சந்தன மரங்களையும் வளர்த்து வந்தார். இந்நிலையில் அதிகாலை சுமார் 4 மணியளவில் பால் கறப்பதற்காக தொழிலாளர்கள் சிலர் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.
தோட்டத்தின் நடுவே சிறிய வெளிச்சத்தை பார்த்ததும் சந்தேகத்தின் பெயரில் தொழிலாளர்கள் அந்த இடத்தை நோக்கிச் சென்றுள்ளனர். அங்கு இரு வாலிபர்கள் சந்தன மரத்தை அறுத்து கொண்டு இருந்தது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். தொழிலாளர்கள் கூச்சலிட்டதும் தோட்டத்தின் உரிமையாளர் தனபால் மற்றும் பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்களும் ஓடி வந்தனர்.
அதேசமயம் சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்த இரு வாலிபர்களும் தப்பியோடினர். இதில் ஒருவர் தப்பி ஓடி விட்டதாகவும், மற்றொருவர் அருகே இருந்த குழியில் விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் நெகமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் விசாரித்ததில், அந்த வாலிபர் திண்டுக்கல் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பதும் அவருடன் வந்த வாலிபர் சிவா என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் கிணத்துக்கடவு அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கி பெயிண்டிங் வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கால் முறிந்த சிவா பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் தாக்கியதில் தான் முத்துக்குமாருக்கு கால் முறிவு ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய சிவாவையும் தேடி வருகின்றனர்.