சிறுத்தையின் கோரப்பசிக்கு 13 ஆடுகள் பலி
பொள்ளாச்சி அருகே சிறுத்தையின் கோரப்பசிக்கு 13 ஆடுகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே உள்ள பொங்காளியூரைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு ஓட்டைக்கரடு பகுதியில் உள்ளது.
இந்த தோப்பில் ஒரு காளை மாடு, ஒரு பசு, ஒரு கன்றுக்குட்டி, 15 ஆடுகள் மற்றும் கோழி சேவல் ஆகியவற்றை வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் தோப்புக்கு சென்ற ரவிக்குமார் தண்ணீர் பாய்ச்சி விட்டு சுமார் 8 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். 10 மணி அளவில் மீண்டும் தோப்பிற்குச் சென்றபோது கழுத்தில் காயங்களுடன் ஆடுகள் ஆங்காங்கே இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தோப்பு முழுவதிலும் சுற்றிப் பார்த்ததில் 13 ஆடுகள் மற்றும் கோழிகள் கழுத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தன.
நீண்ட நேரத்திற்குப் பிறகு இறந்த ஆடுகள் மற்றும் கோழிகளை அதே பகுதியில் குழி தோண்டி ரவிக்குமார் புதைத்தார்.
இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அதே பகுதியில் பாறை ஒன்றின்மீது சிறுத்தை ஒன்று படுத்திருந்ததை அப்பகுதியில் வேலை செய்த தொழிலாளர்கள் பார்த்துள்ளனர்.
ஆகவே ரவிக்குமாரின் தோட்டத்தில் ஆடுகள் மற்றும் கோழிகளை அடித்துக் கொன்றது சிறுத்தை தான் என்பது உறுதியானது. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தகவல் தெரிந்தும் 2 நாட்களுக்கு பிறகே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். கண்துடைப்புக்காக இரண்டு இடங்களில் கேமராக்களை பொருத்தி விட்டு சென்ற வனத்துறையினர் அடுத்த நாளே வந்து இரண்டு கேமராக்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.
சிறுத்தை அப்பகுதியிலேயே சுற்றி வருகிறதா? மேலும் கால்நடைகள் அல்லது மனிதர்களை உயிர்பலி வாங்குமா என்ற அச்சத்தில் கிராமவாசிகள் உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தகவல்களை அறிய வனத்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது எவ்வித தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.