மாரியம்மன் கோவில் திருவிழா: 3 நாள் தேரோட்டம் துவக்கம்
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மூன்று நாள் தேரோட்டம் நேற்று துவங்கியது.
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த மாதம் 22ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 5ம் தேதி அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பறவைக்காவடி உள்ளிட்ட பல்வேறு வகைளில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மூன்று நாள் தேரோட்டம் நேற்று துவங்கியது. கோவில் வளாகத்தில் இருந்து நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை வைக்கப்பட்ட முதல் தேர் புறப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீற்றிருந்த வெள்ளித்தேர் பவனி வந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தேரை வடம்பிடித்து இழுத்தனர். முதல் நாள் தேரோட்டத்தின் இறுதியில் தேர் வெங்கட்ரமணன் ரோட்டில் நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாளான இன்று அங்கிருந்து புறப்பட்டு உடுமலை ரோடு வழியாக சத்திரம் வீதியில் நிறுத்தப்படும். இறுதி நாளான நாளை சத்திரம் வீதியில் தேர் புறப்பட்டு கோவிலை அடைந்து நிலைநிறுத்தப்படும்.
தேரோட்டத்திற்காக நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் ஆய்வாளர்கள் ராமதாஸ், சரவண பெருமாள், அரங்கநாயகி, சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர்கள், ஊர்காவல் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.