மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டைகள் புதுப்பிப்பு
பொள்ளாச்சியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 250க்கும் மேற்பட்டோரின் அடையாள அட்டைகள் புதுப்பிக்கப்பட்டன.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொள்ளாச்சி தெற்கு வட்டார வள மையம் ஆகியன இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமினை நடத்தின. பாலக்காடு ரோட்டில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமினை மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் துவக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் முன்னிலை வகித்தார். சுரேஷ் ஜோசப், ரஞ்சித்குமார், ஹெலினா, திருமூர்த்தி, வித்யா உள்ளிட்ட மருத்துவர்கள் கொண்ட குழுவினர் முகாமிற்கு வந்த 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். உயர் சிகிச்சை, உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு பரிந்துரையும் செய்தனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இம்மருத்துவ முகாம் நடத்தப்படாமல் இருந்தது. ஆகவே இம் மருத்துவ முகாமில் 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டைகளை புதுப்பித்துக் கொடுக்கப்பட்டன. புதிய அடையாள அட்டைகள் பெறுவதற்கு பதிவும் செய்யப்பட்டன.
தெற்கு வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) காயத்ரி தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.