கள் இறக்க அனுமதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
கள் இறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில பிரச்சார குழுத் தலைவர் மணி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில தலைவர் சண்முகம் கூறுகையில், மத்திய அரசின் தவறான முடிவால் நூறு நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனால் இன்று விவசாயத் தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை தென்னை விவசாயத்தை மட்டுமே பிரதானமாக நம்பி உள்ளோம். தென்னையை தாக்கும் நோய்களை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். நோய் தாக்குதலால் பாதிக்கும் மரங்களுக்கு ரூ 15 ஆயிரம் இழப்பீடாக தரவேண்டும். மறு நடவுக்கு அரசே கன்றுகளை இலவசமாக தரவேண்டும். பாமாயில் இறக்குமதியை முற்றிலுமாக தடை செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, கள் இறக்க இந்த அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் மாதம் 5ம் தேதி பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.