ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் திருவிழா: பக்தியுடன் குண்டம் இறங்கிய பக்தர்கள்
ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பக்தியுடன் குண்டம் இறங்கினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது தர்மராஜா திரவுபதியம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 2ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 14ம் தேதி இரவு கண்ணபிரான் தூது, குண்டத்துக்காட்டில் விஸ்வரூப தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகளும், 17ம் தேதி அம்மன் ஆபரணம் பூணுதல், ஊர்வலம், அரவான் சிரசு ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நேற்று (18ம் தேதி) குண்டம் கட்டுதல், பெரிய தேர் வடம்பிடித்தல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிலையில் இன்று (19ம் தேதி) காலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேருக்கு முன்பாக குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. திருவிழாவிற்கென விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’என பக்தியுடன் கோஷமிட்டபடி குண்டம் இறங்கினர். சில பக்தர்கள் அலகு குத்திய நிலையில் குண்டம் இறங்கினர்.
ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளை (20ம் தேதி) தேர் நிலை நிறுத்தல், ஊஞ்சல், பட்டாபிஷேகம் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (21ம் தேதி) மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு ஆகிய நிகழ்ச்சிகளுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.