ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
பொள்ளாச்சி ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 8ம் தேதி சக்தி கும்பம் ஸ்தாபனம் செய்தல் நிகழ்ச்சியுடன்
துவங்கியது. இதனைத் தொடர்ந்து கோவில் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கொடுமுடி, பழநி, கூடுதுறை உள்ளிட்ட கோவில்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து அம்மனை வழிபட்டனர். தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது. பரம்பரை குருக்கள் தங்கமணிகண்டீஸ்வர சுவாமிகள் அம்மனுக்கு சிறப்பு அலங்கார வழிபாடு செய்தார்.
நேற்று காலை குண்டம் திறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை விநாயகர்
கோவிலில் இருந்து பூவோடு புறப்படுதல், இரவு அகத்துார் அம்மன் தீர்த்தம் கொண்டு வருதல், அக்னி குண்டம் வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் குண்டம் இறங்கினர். இதனைக் காண உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வரும் 25ம் தேதி சுவாமி ஊர்வலம், மஞ்சள் நீராடுதல், மகா அபிஷேகம், ஆராதனை பூஜைகளும் நடக்கிறது.