பெண் முன்னேற்றத்திற்கு விழிப்புணர்வு: பைக் பேரணியில் கலக்கப்போகும் பெண்கள்
பொள்ளாச்சியில் முதன்முறையாக பெண்கள் மட்டும் பங்கேற்கும் பைக் பேரணி நாளை நடைபெற உள்ளது.
பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் கிளப் நிறுவனர் செல்வ மணிகண்டன், காபி ஷாப் நிர்வாகி கணேஷ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது, உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையிலும், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பெண்கள் முன்னேற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு பேரணி ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம். பொள்ளாச்சியில் முதல்முறையாக முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பைக் பேரணியாக இது நடைபெறுகிறது.
காபி ஷாப் முன்பாக துவங்கும் இந்த பேரணி கோட்டூர் ரோடு, நா.மூ. சுங்கம், ஆனைமலை, ஜமீன் ஊத்துக்குளி வழியாக நல்லூரை அடைகிறது. அங்கு தனியார் மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அங்கிருந்து மீண்டும் துவங்கும் பேரணி காபி ஷாப்பில் முடிவடைகிறது.
இதில் கலந்து கொள்வோருக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
பேரணியில் பைக்கில் செல்லும் பெண்களுக்கு இருபுறமும் பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் கிளப்பை சேர்ந்த பயிற்சி பெற்ற பெண்கள் பாதுகாப்பாக செல்வார்கள். ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் என அனைத்து பாதுகாப்பு வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தனர். பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் கிளப் நிர்வாகி நந்தகுமார் மற்றும் சோனியா ஆகியோர் உடன் இருந்தனர்.