இன்ஸ்டாகிராம் காதல்: இழுத்துச் சென்றது சிறைக்கு
நாமக்கல்லை சேர்ந்தவர் தருண் குமார் (19). இவர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம், பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு வெகுவிரைவில் காதலாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பெண்ணின் பெற்றோர் கோமங்கலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது பெண்ணை தேடி வந்தனர்.
இதில் திருப்பூரில் தங்கியிருந்த இருவரையும் கோமங்கலம் போலீசார் மீட்டு வந்தனர். போலீசார் விசாரித்ததில் மைனர் பெண்ணை தருண் குமார் திருமணம் செய்தது தெரியவந்தது. இருவரையும் கோமங்கலம் போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மைனர் பெண்ணை திருமணம் செய்த தருண் குமார் மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.