செய்திகள்

தம்பதியர் தற்கொலை

பா.ஜ.க. பிரமுகரின் நில மோசடியால் தம்பதியர் தற்கொலை

பொள்ளாச்சி அருகே பா.ஜ.க. பிரமுகர் மோசடி செய்து நிலத்தை அபகரித்ததால் மனமுடைந்த தம்பதியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பு என்கிற நந்தகோபால கிருஷ்ணன். இவர் அதே பகுதியில் உள்ள வித்யநேத்ரா பள்ளியினை நடத்தி வந்தார். ம.தி.மு.க. வில் பல ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க. வில் சேர்ந்தார். மேலும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

சீலக்காம்பட்டியைச் சேர்ந்த கனகராஜ், சுமதி தம்பதியரின் நிலத்தை விற்றுத் தருவதாக கூறிய தம்பு அவர்களிடமிருந்து நிலத்தின் பத்திரத்தை வாங்கியுள்ளார்.
ஆனால் அவர் சொன்னபடி நிலத்தையும் விற்காமல், பத்திரத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்யும் நோக்கில் இருந்துள்ளார்.
இதுதொடர்பாக கனகராஜ், சுமதி தம்பதியினர் பலமுறை தம்புவை சந்தித்து பத்திரத்தை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால் அவரோ பத்திரத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி வழக்கம்போல் கனகராஜ், சுமதி தம்பதியர் தம்புவை அவரது தோட்டத்து வீட்டில் சந்தித்து பத்திரத்தை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.
ஆனால் தம்பு பத்திரத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததோடு இருவரையும் தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு திட்டியதாக கூறப்படுகிறது. அன்றைய தினமே கனகராஜ், சுமதி தம்பதியினர் விஷம் குடித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 25ம் தேதி சுமதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார், இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கனகராஜ் சிகிச்சை பலனின்றி இன்று (27ம் தேதி) உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கிய நிலையில் பா.ஜ.க. பிரமுகரான தம்பு என்கிற நந்தகோபால கிருஷ்ணன் தலைமறைவானார்.
பா.ஜ.க. பிரமுகரின் நில மோசடியால் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button